குறிப்பு:இணயத்தளத்தின் புதிய வசதிகள் - நட்சத்திரம் பொருத்த மற்றும் பல அம்சங்கள் ...
வடாற்காடு மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்கம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு சமூக அமைப்பாகும். இது சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த அமைப்பு 1917-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
ஆலமரம் போல வளர்ந்து வரும் இச்சங்கம் வேலூரில் 06-08-2017 அன்று நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழாவில் , வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், சமூகத் தலைவர்கள் பங்கேற்றார்கள். முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், IAS & IPS அதிகாரிகள் சமூகப் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழா அன்று சங்கத்தின் முது பெருந்தலைவர், முன்னாள் அமைச்சர், அமரர் M.A.மாணிக்கவேலு நாயகர், சங்க வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெறக் கூடிய முன்னாள் தலைவர் வள்ளல் A.S.அருணாசலம் பிள்ளை, சங்கத்தின் பெயரில் ஆற்காடு அடுத்த தாஜ்புரா சாலையில் பெரும் நிலப்பரப்பை வாங்குவதற்கு பேருதவி புரிந்த முன்னாள் தலைவர் அமரர் திரு.B.முனிரத்தின நாயகர் ஆகியோரின் திருவுருவ வெண்கல சிலைகளும், சமுதாய முன்னோடிகளின் திருவுருவப் படங்களும் திறக்கப்பட்டுள்ளன என்பதும், நமது திருமண தகவல் மையத்திற்கென புதியதாக WWW.VANNIYARPALLAVANMATRIMONIAL.COM என்ற இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதும், நூற்றாண்டு விழா மலர் வண்ணமயமாக அச்சிட்டு வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சங்க வரலாறு குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. நூற்றாண்டு விழாவின் கதாநாயகனாக பணியாற்றிய பெருமை அமரர்.R.மார்கபந்து EX.MPஅவர்களைச்சாரும்.
இந்த சமூகம் வளர "கல்வி தான் முக்கியம்" என்று கருதி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்கு நமது சங்கத்தின் வாயிலாக மாணவர் இல்லங்கள் நிறுவப்பட்டன. கிராமங்கள் தோறும் செல்வந்தர்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும், சமுகப்பற்றாளர்களிடமிருந்தும், 1956 முதல் 1958 வரை சிறுக, சிறுக நன்கொடை வசூலித்து எண்.1, பாரதியார் சாலை, வேலூரில் கட்டப்பட்டுள்ள கட்டிடமே VKK HOSTEL என்கிற நமது சங்க தலைமை கட்டிடம் ஆகும். இதுவே நமது சங்கதிதின் வளர்ச்சிக்கு மைல் கல்லாக விளங்குகிறது.
இந்த VKK HOSTEL-ல் சாதி, மத பேதமின்றி எல்லா சமூகத்து மாணவர்களும் தங்கிப்பயின்று உயர்ந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். இங்குத் தங்கிப் பயின்ற பலர் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், நீதிபதிகளாகவும், IAS,IPS, அதிகாரிகளாகவும், பல்வேறு துறைகளிலும் வல்லுநர்களாகவும், வெளிநாடுகளில் வாழ்பவர்களாகவும் திகழ்கிறார்கள்.
மேற்சொன்ன கட்டிடப்பணி மற்றும் VKK HOSTEL வளர்ச்சிப் பணியில் தன்னலமின்றி தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தியாக சீலர்கள் பட்டியல் நீளும், எனினும் வள்ளல் A.S.அருணாசலம் பிள்ளை, அமரர் தளபதி பூ.மு. ஏகாம்பர கவுண்டர், பேரா.யோகசுந்தரம், காவேரிபாக்கம் சாரங்கபாணி நாயகர், R.தட்சிணாமூர்த்திப்பிள்ளை, R.மார்கபந்து EX.MP போன்றோரின் பணிகள் குறிப்பிட தக்கவை ஆகும். வள்ளல் A.S.A அவர்கள் மறைவிற்குப் பின்னர் இந்தசங்கம் தடம் புரளாமல் இயங்க பாதுகாவலராக விளங்கியவர் அமரர்.ஆர்.எம். என்றால் அது மிகையாகாது.
கல்விப்பணி சிறக்கும் வண்ணம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா சாலையில் 1982-ல் பல்லவன் தொழிற்பயிற்சி நிலையம் (ITI) ஆரம்பிக்கப்பட்டது. இவ்விடத்தில் பல்லவன் மெட்ரிகுலேஷன் பள்ளி 2002-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு மற்றவர்களை காட்டிலும் வன்னியர்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்கப்படுகிறது . சங்கத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம் மேல்மொணவூரில் இயங்கி வரும் பல்லவன் கல்வியியல் கல்லூரியில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. சமூகப்பணியாற்றும். நமது சங்கத்தின் மூலம் திருமண தகவல் மையம் 2002-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வருகிறது. அமரர் ஆர்.எம். அவர்கள் காட்டியுள்ள வழியில் செயல்படும் இந்த சங்கம், மேலும் வளர நிர்வாகஸ்தர்களின் ஒத்துழைப்பும், அங்கத்தினர்களின் கூட்டு முயற்சியும் மேலும் மேலும் வளர துணையாக உள்ளன என்று N.முனியகவுண்டர் தலைவர் தெரிவித்துள்ளார்.